நச்சு : ஜெகநாத் நடராஜன்

அவன் ஓடிக் கொண்டிருந்தான்.

அவனால் விரைவாக ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. நின்று மூச்சை உற்றுப் பார்த்தான். மூச்சை இழுத்து அடக்கினான். பெரும் சத்தமாக இருமல். தாகம் எடுத்தது. உடலெங்கும் வலித்தது. ஆறுதல் தேடிக்கொள்ள முடியாத வலி. ஆனாலும் அவன் ஓடினான்.

இரவு கடந்து போகும் முன் அவன் எங்காவது சென்று சேர வேண்டும். நகரம் மயான அமைதியில் கிடந்தது. நாய்களின் குரைப்பு. தூரத்துப் பறவைகளின் சத்தம். வானில் சுடரும் சிறு சிறு நட்சத்திரங்கள். யாருமற்ற தெருக்களில் புழுதியைச் சுற்றிக் கொண்டு படரும் காற்று. ஆம்புலன்ஸ் ஒன்றன் பின் ஒன்றாய் சீறிக்கொண்டு அபாய சத்தத்துடன் போயிற்று.

அடுத்து கேட்ட அந்த சைரன் ஒலி அவனை நடுக்கமுறச் செய்தது. போலீஸ் வேன். அவன் யாரும் தன்னைப் பார்த்துவிடாமல் பம்மிக்கொண்டான். இருமல் வந்து விடாமலிருக்க துண்டால் போர்த்திக் கொண்டான்.

அவன் யார் கண்ணிலும் படாமல் ரகசியமாகத் தப்பித்து ஓடி வரும் போது நள்ளிரவு தாண்டியிருந்தது. வெளிச்சமான பகுதிகளைக் கவனமாகக் கடந்து, இருளான பகுதிகளை மிகவும் கவனமாகக் கடந்து மருத்துவமனையிலிருந்து தப்பித்து வந்திருந்தான்.

அவன் உடலில் நச்சுக் கிருமி நிரம்பியிருப்பதாகச் சொன்னார்கள். இல்லை, அது அவனை அழித்துவிடும். மருத்துவமனையிலிருந்தே அதனை அழிக்க வேண்டும். அவன் வெளியில் போகக்கூடாது, போனால் அவனிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிடும் என்று எச்சரித்தார்கள்.

 

ஒரு மாதத்திற்கு முன்பு வரை அவன் ஓஹோ என்றிருந்தான். அவனுக்கு திருடுவது கை வந்த தொழில். அதை விட அற்புதமான தொழில் உயரமான தென்னை மரங்களில் ஏறி ஓலை வெட்டுவது, தேங்காய் பறிப்பது. தான் வேலை பார்க்கும் வீடுகளில் பத்தில் ஒரு வீட்டை அவன் குறி வைப்பான். நாய்கள் இருந்தால் பழகிக் கொள்வான். தன் வாசனையை நுகர வைப்பான்.

கதவுகள், ஜன்னல்கள், பக்கத்து வீடு, தெரு எல்லாம் இரண்டு மூன்று நாட்கள் வலம் வந்து பார்ப்பான்.  யாரவது வெளியூர் போனால் மட்டுமே உள்ளே போவான். நிதானமாய் திருடுவது அவன் பழக்கம். அவன் சாவிக்கு திறக்காத பூட்டே இல்லை.

திருடிய பொருளை கொஞ்சம் கொஞ்சமாய் விற்பான். அல்லது அடகு வைப்பான். சுய சமையல்தான். சமையலில் கெட்டிக்காரன். காலை சமைத்து சாப்பிட்டுத் தூங்கினால் இரவுதான் விழிப்பு வரும் அவனுக்கு. இரவில் அவனைத் தூங்க வைக்கத்தான் அவன் படாத பாடுபடுவான். குடிக்க மாட்டான். பெண் சகவாசம் கிடையாது. திருட்டு மட்டும். சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட சலனம். புத்திசாலித்தனத்தை அதன் மூலம் கூர்தீட்டிப் பார்க்க ஆசைப்பட்ட தவறான கோணம். சிலர் கண்டும் காணாமலும் விட்டதால் விளைந்த துயரம்.

 

ஜெயில் சாப்பாட்டை வாயில் வைக்க ஆகாமல் சில நாளில் இருமினான், காய்ச்சல் வந்தது பேச முடியவில்லை, வாந்தியும் பேதியுமாய்க் கிடந்தவனை மருத்துவமனைக்குத் தூக்கி வந்தார்கள். சோதித்தார்கள். பின் கொரானா என்று சொன்னார்கள். அவனைப் போலவே நோய் கண்டிருந்தவர்கள் அடங்கிய வார்டில் சேர்த்தார்கள். ஜெயிலை விட அது சிறப்பானதாக அவனுக்குத் தெரிந்தது.

 

காலை முதல் இரவு வரை அவனுக்கு சத்துள்ள சாப்பாடு கிடைக்கும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான். உருண்டும் புரண்டும் தூங்கியும் விழித்தும் அவனால் நேரத்தைக் கொல்ல முடியவில்லை. எல்லா முகங்களும்,  முகமுடியால் மூடப் பட்டிருந்தன. உடல்களும் பாதுகாப்பான உடைக்குள் இருந்தன.

சோர்வும் பயமும், குழப்பமுமான கண்கள் மட்டும் தெரிந்தன.  பேச்சும், சிரிப்பும் அற்றுப்போய் இது என்ன வாழ்க்கை என்று அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. பக்கத்தில் கிடந்தவர் அவ்வப்போது சிரிப்பார். பேரு என்பார். போலீஸ் ஏன் வருது. கெட்ட பழக்கத்த விட்டு என்பார். அவனும் சிரித்து வைப்பான். திடீரென்று மூச்சுக்குப் போராடினார்.

மூச்சு அவர் உயிரைப் பிடுங்கிக்கொண்டு விடை பெறப் போவது போலவும், உடல் அதைத் தடுக்கப் போராடுவது போலவும் தெரிந்தது. செவிலியர்கள் பரபரப்பாகி ஏதேதோ சாதனங்களைக் கொண்டு பொருத்தினர். நிறைய மருத்துவர் ஓடி வந்தனர். எல்லாம் கொஞ்ச நேரம். படுக்கையில் செத்துப்போனவரை வண்டியில் வைத்து இழுத்துப் போனார்கள்.

அவன் வெலவெலத்துப் போனான். அவன் செத்தவர்களைப் பார்த்திருக்கிறான். கண்முன் இப்படி ஒருவர் செத்துப் போனது அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல் அன்று மருத்துவமனையில் பதினாறு பேர் செத்ததாக செய்தி கேள்விப்பட்டிருந்தான். அவ்வப்போது பார்த்த செத்துப் போனவனின்  உலர்ந்த சிரிப்பை அவன் நினைத்துக் கொண்டான். அது நடந்த  இரண்டு தினங்களில்  அவன் அங்கிருந்து வெளியேறுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து சிந்தித்து இரவெல்லாம் தூங்காமல் மருத்துவமனையை நோட்டமிட்டான்.

எட்டு மணிக்கு இரவுச் சாப்பாடு அதன் பின் மருந்து மாத்திரை உண்டு முடிந்தால், புதிதாக யாராவது நோயாளிகள் வந்தாலொழிய அந்த வார்ட் அமைதியாகத்தான் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு செவிலியர் வருவதும் சுற்றிப் பார்ப்பதுமாக இருந்தனர். அவனைப் போலவே நோயாளியாகியிருந்த சில கைதிகளுக்காக ஒரு காவலர் வந்து போவார்.

எல்லாம் இரவு ஒரு மணிக்குள் முடிந்து விடும். அச்சு அசலாக இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது. அதனால் அவனுக்கும் பதற்றமே இல்லை. அன்று இரவெல்லாம்  ஒரு மணிக்கு திட்டமிட்டு, இரண்டு மணிக்கெல்லாம் வெளியே சுவரேறி வந்துவிட்டான். பெரிய காவலில்லை. இப்படி ஒருவன் அங்கிருந்து தப்பிப்பது முதன் முறையாகக்கூட இருக்கலாம். நாளை போலீஸ் சுறுசுறுப்பாகும், விசாரணை, கண்காணிப்பு கேமரா பரிசோதனை. தேடல் என்று பரபரப்பாகும். செய்தித்தாள்களில், தொலைக்காட்சியில் அவன் படம் வெளியாகும். மாட்டிக் கொள்ளக் கூடாது.

 

என்ன செய்யலாம் என்று யோசித்தான். நடக்க கொஞ்சம் வலு ஊறியிருந்தது. இருள் படர்ந்திருந்த இடமாக நடந்தான். மூச்சு அவனிடமிருந்து விடைபெறத் துடித்தபோது நின்று கொண்டான். பாக்கெட்டிலிருந்து போனை எடுத்தான். பக்கத்து பெட் ஆளிடம் சாவதற்குமுன் வாங்கியது. பேச வாங்கியதை வச்சுக்க என்று விட்டார். அவரையே அவர் குடும்பத்தினரால் வாங்கிச் செல்ல முடியவில்லை. போனையா தேடப் போகிறார்கள்.

 

நம்பரை ஞாபகம் கூட்டி டயல் செய்தான். திருநெல்வேலி ஜோசியக் கிழவி போனை எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். கிழவி எடுத்துவிட்டாலே பாதி ஜெயம்தான். கிழவி எடுக்கவில்லை. ஒருவேளை நேரம் சரியில்லையா? என்று யோசித்தான்.

எங்கு போவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் தங்கியிருந்த வீடு இருக்கிறது. அக்கம் பக்கத்தில் கௌரவமாகப் பார்த்தவர்களின் முன் போலீஸ் அவனை அடித்து இழுத்துப் போனது. யாரும் என்ன விஷயம் என்றுகூடக் கேட்கவில்லை. ஜன்னல்களையும், வீட்டையும் பூட்டிக்கொண்டு அமைதியாக இருந்தார்கள். நோய் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்தவை அவை. வேகமாக நடந்தால் வீட்டுக்குப் போய் விடலாம்.

ஒளித்து வைத்திருக்கும் கொஞ்சம் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு எங்காவது சென்றுவிடலாம். போலீஸ் தேடி வர சற்று தாமதமாகும். பிடிபடக்கூடாது. பட்டாலும் அடிக்க மாட்டார்கள் என்று மனது சொல்லிற்று. ஆனால் இப்போதோ அல்லது எப்போது சாவு என்று ஏங்கிக் கொண்டு மருத்துவமனையில் கிடப்பது கொஞ்சம் வலியாக இருந்தது.

 

சுதந்திரமாக மூச்சு விட்டதில் கொஞ்சம் தெம்பு வந்தது. நிதானமாக நடந்தான். நாய்கள் புது வேகமுற்றிருந்தன. அவனுக்கு நாய்களை கட்டுக்கு கொண்டு வரத்தெரியும். அவைகளுக்குப் சாப்பிடப் போட போட ஒன்றுமில்லாததுதான் ஒரே குறை. நாய்கள் அவனை நம்பி நீண்ட தூரம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பின. மனம் தாங்காமல் அழைத்து தொண்டைக்கு கீழே தடவிக் கொண்டிருந்தான். கூவென்றும், காவென்றும் பரிபாஷை பேசிய நாய்களை விட்டு கனத்த மனதோடு நகர்ந்தான்.

கொஞ்ச தூரம் நடந்த பின்  போன் ஒலித்தது.

ஆன் செய்தான்.

”ராசாதி ராசாவுக்கு குற ஒண்ணும் இல்ல மஹராசன் புள்ளைக்கு என்ன குற வந்திரும்

சீமானப் போலருப்ப ராசா

குரு ஹோரை

செவ்வா பார்வ

காலம் கனிஞ்சிருக்கு

கல்யாணம் வந்திருக்கு.” என்று சொல்ல

”நிறுத்துறியா?” என்று கத்தினான்.

”என்னாச்சு ராசா”

கிழவி ஆறுதலாகக் கேட்க

”பேசறது யாருன்னு தெரியுதா? இது என் போன் இல்ல” என்று சொல்ல

”என்ன குரலு ஒரு மாதிரியா இருக்கு. தென்ன மரம்போல வளந்தவுக தான.”

”ஆமா சொல்லு பாட்டி”

கேளு. நீ தான் சொன்னவ வாய்க்கு பூட்டு போட்டுட்ட,”
அவன் அமைதியாக நிற்க ”வெஷ நோய் வந்திருக்கா”
”ஆமா. ஆஸ்பத்திரில இருந்தேன்”

”இருக்க முடியாத உன்னால. பைரவனுங்க நிக்காங்களா பின்னால?”

அவன் பார்க்க சற்று தூரத்தில் இரண்டு நாய்களும் நின்று பார்த்துக் கொண்டிருந்தன

மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாக வர

”போலீஸ் வருது. நா, அப்புறம் பேசறேன்”
”போலீசெல்லாம் வராது. நாம பேசணும்னு விதி. கேட்டுக்காம போயிடாத. அப்புறம் ரொம்ப கஷ்டம்”
அவன் சாலையைப் பார்க்க மோட்டார் சைக்கிளில் போலீஸ் வர அவன் பயத்துடன் பார்த்தான். இருமல் வந்தது. துண்டை எடுத்து வாயை மூடிக் கொண்டான். வந்தது போலீஸ் என்று தெளிவாக தெரிந்தது. அவனால் போலீசை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுகொள்ள முடியும். அது ஒரு சூட்சுமம். அது அவனுக்கு அத்துப்படி ஆகியிருந்தது. கிழவி அவனிடம் ஏதோ சொல்ல முற்பட்டாள்.

அவன் பயத்துடன், ”நான் மாட்டிக்குவேன் போல இருக்கு பாட்டி” என்றான்.

ஆனால், அவளோ ”அமைதியா இருக்க மாட்ட. உன்னோட கிரகம் என் கையில இருக்கு பாக்குறேன் உள்ளங்கையை விரிச்சி பாக்கறேன். நேர்கோட்டில் நல்ல கிரகம் தான் இருக்கு. நல்ல பார்வை எல்லாம் இருக்கு. ஒன்னும் நடக்காது பாரு.” என்று சொல்ல, அவன் திரும்பிப் பார்க்க. வந்து கொண்டிருந்த போலீசை இரண்டு நாய்களும் பாய்ந்து துரத்த அந்த போலீஸ் மோட்டார் சைக்கிள் வேகமாக திரும்பிச் செல்கிறது.

”தெய்வமே…” என்று அவன் அதிர்ச்சியோடு பேச,

”யாரு தெய்வம், யாரு மனுஷன்? நேரம் வாய்க்கும்போது ஒருத்தன் தெய்வமாகலாம் தெய்வம் மனுஷன மாதிரி பிச்சைக்காரத்தனமா நடந்துக்கிறதில்ல.”

அவன் “ஆம்” என்றான். சரி நானே பேசிக்கிட்டு இருக்கேன் நீ எதுக்காக தம்பி போன் பண்ணுன?” என்று கிழவி கேட்க, “ஏன் நான் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில வந்தன்னு தெரியல உள்ள இருக்கும்போது போகணும், போகணும்ன்னு தோணுச்சு வெளியில வந்தப்போ ஏன் வந்தோம் அப்படின்னு ஒரு பயமா இருக்கு. நாம பார்த்த சென்னையா இது. ஒரு நாதி இல்லாம, ஒரு கார் சைக்கிள் வேன் லாரி ஓடாம, ஹாரன் சத்தம் கேட்காம எல்லாரும் செத்துப் போனவங்க மாதிரி இந்த இடம் இருக்கு. போலீஸ் மட்டும் சுத்தி சுத்தி தேடுது. யார புடிக்க என்னன்னு தெரியல.” என்றான்.

“நீ ஆஸ்பத்திரி உள்ளேயே இருந்ததுனால உனக்கு உலகம் தெரியல உன்ன மாதிரி உன்னோட அலைகிற ஆட்களை பிடிக்கத்தான் போலீஸ் சுத்திக்கிட்டு இருக்கு.”

”எனக்கு பயமா இருக்கு பாட்டி.”

”சென்னையில எல்லாரும் பயத்தோட தானே வாழறாங்க… எந்த நேரத்துல என்ன நடக்கும். மூச்சு இருக்குமா? உடம்பு கெட்டு போயிடும்னு தானே பயப்படுறாங்க சென்னையில இருக்கவங்கள வெளியூர்ல இருந்து பேசுறவங்க எப்படி இருக்கீங்க, பத்திரமா இருக்கீங்களான்னுதான கேக்கறாங்க…”

”பாட்டி நேரம் இல்ல எனக்கு. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க. எனக்கு தலை சுத்துது. மூச்சு விட முடியல பசிக்குது. என் கையில காசு இல்லை” என்று அவன் பரிதாபமாக கிழவியிடம் சொன்னான்.

அவன் டீக்கடையை நோக்கி நடக்க இரண்டு நாய்களும் அவனை நோக்கி ஓடுகின்றன.”உன் கையில பணம் இருக்கும் வாசனை எனக்கு வருதே…” என்று கிழவி சொல்ல, அவன் தன் கையில் இருக்கும் போனை அப்படியும் இப்படியும் புரட்டிப் பார்த்து அதன் கவரை திறக்க, உள்ளே மடித்து வைத்த ரூபாய் நோட்டுகள் சில இருக்கின்றன அவன் சந்தோஷமாகி தூரமாய் பார்க்க ஒரு டீக்கடையில் விளக்கு எரிந்து பிரகாசம் ஆகிறது.

“பத்து ரூபாய்க்கு பொறை குடுங்க. பட்டர் பிஸ்கட் குடுங்க. டீ போடுங்க” என்று வரிசையாக அவன் ஆர்டர் செய்ய,

“கொஞ்சம் பொறுங்க தண்ணி கொதிக்கட்டும் என்று டீக்கடைக்காரன் சொல்ல,

அவன் அமைதியாக நிற்கிறான். அவன் அருகே வந்து வாலை ஆட்டும் நாய்களுக்கு பிஸ்கட்டை எடுத்துப் போடுகிறான்.

“நீங்க இந்த ஏரியாவா? உங்களை எங்கயும் நான் பார்த்ததில்லையே என்று டீக்கடைக்காரர் சொல்ல

“கொஞ்சம் தூரமா இருந்து தான் வந்து இருக்கேன்.” என்று அவன் சொல்கிறான்.

“தூரம்னா என்ன தூரம் என்று டீக்கடைக்காரன் மறுபடியும் கேட்க எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாய்களுக்கு பிஸ்கட் போடுவதிலேயே அவன் கவனமாக இருக்கிறான்.

“காலம் கெட்டுக் கிடக்குது. எங்கிருந்து வந்தீங்க கையில் மாஸ்க் ஏதும் இல்லை. எந்த ஏரியான்னு சொல்ல மாட்டேங்கறீங்க இந்த ஆளுங்கள பார்த்தா, போலீஸ் போன் பண்ண சொல்லி இருக்காங்க. ஒன்று நீங்க யாருன்னு எனக்கு விவரம் சொல்லுங்க இல்ல இல்ல உடனடியா இந்த இடத்த காலி பண்ணிடுங்க.” என்று டீக்கடைக்காரன் சொல்ல,

அவன் கையில் இருந்த நூறு ரூபாயை நீட்ட, பார்க்கும் கடைக்காரன் ”சில்லறை இல்லை”, என்று சொல்ல,
“என்ன சார் பண்றது?” என்று அவள் கேட்க,

”பரவால்ல நீங்க கிளம்புங்க வந்து நோய பரப்பி விட்டுட்டு போயிடாதீங்க அப்புறம் நாங்க கிடந்து சாகணும்.” என்று கோபத்தோடு சொல்ல.

அவன் மெல்ல கிளம்புகிறான் நாய்கள் பிஸ்கட்டை சாப்பிட்ட வண்ணம் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றன.

அவன் நடக்கத் துவங்குகிறான். கால் போன போக்கில் ஒரு நடை.வேகமாகவும், கால்வலித்தபோதும், மூச்சித்திணறிய போதும் கொஞ்சம் மெதுவாகவும் நடை. கிழவி இனி பேசமாட்டாள். தொடர்ந்து போன் செய்தால் இன்னொரு நாள் பேசினாலும் போனை எடுக்க மாட்டாள். விதி இல்லை என்பாள். இனி அவன்தான் முடிவெடுக்க வேண்டும். என்ன முடிவு எடுப்பது? நச்சு நிறைந்த உடல். உயிரைப் பிரியத் துடிக்கும் மூச்சு. அவன் பூமியில் கால்பாவி நடக்கும் உணர்விலேயே இல்லை. சோர்ந்து நாக்குத்தள்ளி நின்றபோது, வேகமாய் ஜீப் வந்து நின்றது.

”ஏன்டா ங்கோத்தா உன்ன தேடிப்பிடிக்கறதாடா எங்களுக்கு வேலை?”

போலீஸ்கார்ர் தள்ளி நின்றே பேசினார். ஒரு முக கவசத்தை தூக்கிப் போட்டு “ மாட்டிக்க” என்றார்.
அவன் மாட்டிக் கொண்டான். மூச்சிரைத்தான்.

”எங்கடா கிளம்பிட்ட? ஊர்ல உள்ளவன நோயாளியாக்கி சாவடிக்கவா?”

”இல்ல. என்னால முடியல. எங்கயாவது போகணும்ன்னு கிளம்பிட்டேன். நீங்க வரலன்னா செத்து கூடப் போயிருப்பேன்.”

”அத ஆஸ்பத்திரில இருந்து செத்து போகலாமில்ல. யாருக்கும் தொந்தரவில்லாம…”

”மன்னிச்சுக்கங்க சார்”

என்று அருகே வர,

“அங்கயே நில்லு. ஏன் பக்கத்து பெட்டு ஆளு போன தூக்கிட்டு வந்த?”

”அவருதான் குருத்தாரு.”

”யாரு செத்தவரா?”

”சாவறதுக்கு முன்னால கொடுத்தாரு.”

”நிஜம்மாவா?”

”ஆமா சார்…”

”உன் கிட்ட ஏன் கொடுத்தாரு?”

”அவரு வீட்ல அவரு செத்திருவாருன்னு முடிவு பண்ணி ஆஸ்பத்திரில விட்டுட்டுப் போயிட்டாங்க. பாக்க கூட யாரும் வரல. நாந்தான் கொஞ்சம் சிரிச்சு பேசினேன். நல்லாருப்பன்னாரு.”

”நீ இப்படி வெளில வந்தா எப்படி நல்லாருப்ப. வழக்கமா இப்படி ஓடினவன் பிடிச்சா அடிச்சு தொடக் கறில பாதிய பிச்சுடுவோம்.”

“ஐயா அந்த மாதிரி எதும் பண்ணிடாதீங்க”

“சாகப் போறவன அடிச்சு என்ன லாபம்? சரி, நீ ஆஸ்பத்திரிக்கு கிளம்பு”

”ஜீப்லயா? என்று அவன் முன் நகர,

”மயிர்ல… நாங்க கொரானா வந்து சாகவா. நடடா.” என்று லத்தியை எடுத்து ஜீப்பில் தட்டினார்.

அவனுக்கு கால்கள் பலமிழந்தன.

”என்னால நடக்க முடியாது. நீங்க போங்க. நா சத்தியமா வந்திருவேன்.. எனக்கு போக எந்த இடமும் இல்ல” என்ற போது போன் ஒலிக்கிறது.

பீப் ஒலி. மெசேஜ்.

”யார்ரா?”

அவன் போனைப் பார்த்தான்.

”செத்தவரு யார்கிட்டயோ செலவுக்கு பணம் கேட்டிருப்பார் போலருக்கு.வந்திருக்கு”

”பணம் வந்திருக்கா. எவ்வளவு?”

”அம்பது ஆயிரம்”

”அம்பதாயிரமா?”

”ஆமா. ஜீ பே”

”ஏட்டய்யா என்ன பண்ணலாம்?”

”போன வாங்குய்யா. டேய் நீ சொன்னமாதிரி மெல்லமா நின்னு நின்னு நடந்து ஆஸ்பத்திரிக்கு வந்துரு.”

ஒருவர் கை நீட்டி,

”போன குடு”

”அப்ப இதுல இருக்க பணம்…”

”போனுக்கும் உனக்கும் சம்பந்தமில்ல”

”நீங்க பணத்த பங்கு போட்டுக்குவீங்களா?”
”அதெல்லாம் எதுக்கு உனக்கு? போன குடு.”
”தரமாட்டேன்.”

”தரமாட்ட…?” என்று லத்தியை எடுத்துககொண்டு ஏட்டையா வந்தார்.

லத்தியின் பலத்தை வளைத்து பரிசோதித்தார்.

”போன தரப் போறியா? இல்லையா?”

”மாட்டேன். என்னென்னவோ தப்பு பண்னியிருக்கேன். இது கூசுது. அந்த ஆளோட புன்னகச்ச முகத்துக்கு துரோகம் பண்ண மாட்டேன்.”

”என்னல பண்ணுவ பணத்த? ஆட்டைய போட்டுடுவியா?”
”அனுப்பின ஆளுக்கு பணத்த அனுப்புவேன். அதுதான் தர்மம்.”

”மயிறு…” என்று அடி விழ, அவன் பலம் கொண்ட மட்டும் கதற,

குரைத்தபடி நிறைய நாய்கள் ஓடிவந்தன. லத்தி அடி நாய்களுக்கும் விழ அவை குரைக்க, இன்னும் பல நாய்கள் ஓடிவந்து குதறின.

மூன்று போலீஸ்காரர்களை நாய்கள் கடித்துக் குதறிவிட்டதாக அவன் ஸ்டேஷனுக்கு போன் செய்து சொன்னான்.

புதிய போலீஸ்காரர்களுக்காக காத்திருந்தான்.

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.