மட்டக்களப்பில் 13 வயது சிறுமி உயிர்மாய்ப்பு!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தாயுடன் இந்தச் சிறுமியும் அவரது இரட்டைச் சகோதரிகளும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தந்தை, இரட்டைச் சகோதரிகளுக்கு ஆடைகள் வாங்குவதற்குப் பணம் அனுப்பியுள்ளார்.

அடுத்த மாதம் தான் நாட்டுக்குத் திரும்பி வந்ததும் மேற்படி சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்குப் பணம் தருவதாகத் தந்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து தனக்கு ஆடைகள் வாங்கத் தந்தை பணம் அனுப்பவில்லை எனக் கோபமடைந்த சிறுமி நேற்று மாலை 5.45 மணியளவில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை 12 வயது சிறுவன் ஒருவர், 26 பெண்கள் உட்பட 105 பேர் கடந்த 8 மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரியவருகின்றது.
