மன்னாரில் நாளை பொது முடக்கம்! சகல தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் நாளை திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் பொது முடக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் பொது முடக்கப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை 57 ஆவது நாளாகப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் .அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக நிறுத்தி சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் பொதுப் போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளை திங்கட்கிழமை கடமைகளுக்குச் செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமாகும். இந்தப் பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்படும்.

இந்தப் போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்குக் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும்.

எனவே, மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.