கொழும்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண்கள் இருவரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கறுப்பு நிற அரைக் காற்சட்டையும், கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.