வீரியம் குறையாத பிரேரணையை நிறைவேற்ற இணை அனுசரணை நாடுகள் பாடுபட வேண்டும் – சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை.
“வீரியம் குறையாத வண்ணம் முக்கிய விடயங்களைத் தொடர்ச்சியாக உள்ளடக்கியதாக ஐ.நாவின் புதிய பிரேரணையை நிறைவேற்ற இணை அனுசரணை நாடுகள் பாடுபட வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் புதிய தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஜெனிவாவில் நாளைய தினம் 60/01 பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் சென்ற வருடம் இணை அனுசரணை நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக நாம் அதனை எதிர்க்கின்றோம் எனச் சொல்லியிருந்தாலும் வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பைக் கோரவில்லை. அதனால் வாக்கெடுப்பு இன்றி அது நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தடவையும் அப்படியான ஒரு எதிர்பார்ப்போடு இணை அனுசரணை நாடுகள் இருக்கின்றன. இதற்காக இலங்கை அரசாங்கம் கேட்ட சில திருத்தங்களையும் மேற்கொண்டதாக நாம் அறிகின்றோம். அது எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது. ஏனெனில் இந்தப் பிரேரணையின் சில வீரியங்களைக் குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் அப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்கக் கூடும். ஆனால், பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியது எல்லாவற்றிலும் விட முக்கியமான விடயம்.
சில வார்த்தைப் பிரயோகங்களினால் சில நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரேரணை நிறைவேற்றப்படாது போனால் அது பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் கூறக்கூடும் இந்தத் தீர்மானங்களினால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. தீர்மானங்கள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்த்தவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது தொடர்ச்சியாக இருக்க வேண்டுமானால் விசேடமாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது அதிலும் விசேடமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் சம்பந்தமாக இருக்க வேண்டுமானால் இந்தப் பிரேரணைகளால் தொடர்ச்சியாக நிறைவேற்றுவது அத்தியாவசியம். இது பலருக்குப் புரியாத விடயமாகவும் இருக்கலாம். இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால்தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு இலங்கை தொடர்பான விடயங்களில் கரிசனை செலுத்த முடியும்.
ஆகையினாலே புதிய பிரேரணை ஒன்றைத் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டியது அத்தியாவசியம். அந்தவகையில் இணை அனுசரணை நாடுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம். அதில் உள்ளடக்கம் தொடர்பில் எமக்குச் சில ஏமாற்றங்கள் இருந்தாலும்கூட அந்த ஏமாற்றங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டு இந்தப் பிரேரணையை முன்வைத்து அதை நிறைவேற்ற சகல நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதனால் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளுக்கு நாம் நன்றி செலுத்துகின்றோம். கூடிய அளவுக்கு வீரியம் குறையாத வண்ணம் முக்கிய விடயங்களைத் தொடர்ச்சியாக உள்ளடக்கியதாக அந்தப் பிரேரணையை நிறைவேற்றப் பாடுபடுங்கள் என விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
