வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம்.
வடக்கு மாகாண ஆசிரியர்கள் இன்று மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பின்தங்கிய பிரதேசம் மற்றும் அதிகஷ்டப் பிரதேசங்களில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும் வடக்கு மாகாண ஆசிரியர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்த வேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்டக் களத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
