கஜேந்திரகுமார் எம்.பி. கூறுவது உண்மையல்ல என்கிறார் சுரேஷ்.
தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது சுவிஸ் அரசு சமஷ்டித் தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல, அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசு அழைத்தது சமஷ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர, வேறு வேறு எதற்கும் அல்ல.
அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. அரசை சேர்ந்தவர்கள். எனவே, அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்கள். ஆனால், அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.எனவே, இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நாங்கள் அதிலே போட்டியிடுவோம், தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13 ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே, இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை.
மேலும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டுள்ளன. அது தொடர்பான அவர்களது கருத்துருவாக்கத்தில் தான் ஏதோ தவறு உள்ளது.” – என்றார்.
