செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தனின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றல்! – தொடர்கின்றது தீவிர விசாரணை.
பாதாள உலகக் குழு உறுப்பினர் “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள “யாழ். ஆனந்தன்” என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள “யாழ். ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலுக்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிஸ்டல் ரக துப்பாக்கிகள் இரண்டும், 9 மி.மீ ரக தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
அத்துடன், “யாழ். ஆனந்தன்” என்பவருக்குத் துப்பாக்கியைக் கொடுத்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து இந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய “யாழ். ஆனந்தன்” என்பவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
