மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே இன்று இலங்கையில் உண்டு – இலண்டனில் இப்படி வறுத்தெடுத்த நீதி அமைச்சர்.
“இலங்கையில் சட்டவாட்சியை உறுதிப்படுத்திப் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றனர். மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே இன்று இலங்கையில் உள்ளது.”
இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் சென்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இலண்டன் நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். நிறைவடைந்த ஒரு வருட காலத்தில் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாகச் செயற்படுத்தியுள்ளோம்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது அரசின் பிரதான எதிர்பார்ப்பாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சட்டத்தை மதிக்கும் சிறந்த சமூகம் ஒன்று தோற்றம் பெறும். இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எதிர்க்கட்சியினர் அதற்குத் தடையாகச் செயற்படுகின்றனர். பாதுகாப்பு சார்ந்த விடயங்களைப் பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே இன்று இலங்கையில் உள்ளது.
பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து அரசு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.” – என்றார்.
