சகல தடைகளும் நீக்கப்பட்ட பின்பே மாகாண சபைத் தேர்தல்! – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு.
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏராளமான தடைகள் காணப்படுகின்றன. அந்தத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும்.”
இவ்வாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு அக்கறையுடன் உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் பல விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டிய தேவையுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும். எனவே, அது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதை முன்னிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரைகளை இனியும் நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எனவே, அவர்கள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுவது உறுதி.” – என்றார்.
