தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் – செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் முன்னெடுப்பு.
தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்று செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்தப் அடையாளப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள், அருட்சகோதரர்கள் எனப் பல கத்தோலிக்கப் பிரமுகர்கள் பங்கெடுத்தனர்.
முன்பதாக அணையா தீபத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக செம்மணி – சித்துப்பாத்தி மயானத்தின் சுற்றுவட்டம் வரை சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறிய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையின் பொதுச்செயலாளர் சுஜிதர் சிவநாயகம்,
“செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தகவல்கள் மீண்டும் பல தமிழ் மற்றும் சில ஆங்கில ஊடகங்களின் வழியாக வெளிக்காணரப்பட்டிருப்பதைக் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அதன் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பான செய்திகள் குறித்து பிரதான சிங்கள ஊடகங்களின் கவனம் குறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
ஒரு நாடாக, இவ்விதமான வலிமிகுந்த உண்மைகளிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.
இதேநேரம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 1980களின் இறுதியிலிருந்து இலங்கையில் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் பேர் வரை காணாமல்போயுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2017இல் நிறுவப்பட்ட காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம், பாதுகாப்புப் படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறையீடுகளைப் பெற்றுள்ளது.
இத்தகைய புள்ளிவிவரங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்த துயரம் எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்திருக்கின்றது.

அதேவேளையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முறையாக புதைகுழிகளைத் அகழ வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதேநேரம் சர்வதேச தொழில்நுட்ப ஆதரவின் அவசியத்தை சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அத்தகைய உதவியை தாமதமின்றி நாடுமாறு அரசைக் கோருகின்றோம்.
அத்துடன் வளங்கள் பற்றாக்குறையால் உண்மையைச் சமரசம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி தனித்துவமான வேதனையை வெளிப்படுத்துகின்றது.

மற்றைய மனிதப் புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், இங்கு பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவை உயிர்கள் அழிந்ததையும், மேலும் எமது நாட்டைச் சிதைத்த இன அரசியல் பரிமாணங்களையும் சாட்சியப்படுத்துகின்றன. அந்த அகழ்வுகள் மீதான மௌனம், சமூகங்களுக்கு இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதோடு, போரின் காயங்களை நீடிக்கச் செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

செம்மணி மனித ப்புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல்போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்தவகையில் இந்த நாட்டின் மக்களாகவும் பாதிக்கப்பட்டவர்களோடும் அவர்களின் என்பதை குடும்பத்தினரோடும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்துகின்றோம் – வலியுறுத்துகின்றோம்.
நீதி என்பது மனித உரிமை மட்டுமல்ல அது வேதாகமக் கட்டளையாகும். இதையே இறைவாக்கினர் மீக்கா நமக்கு நினைவூட்டுகிறார், “நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?”
எனவே, எத்தகைய வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அரசு, சிவில் சமூகம் மற்றும் மதச் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் அழைக்கின்றோம்.” – என்றார்.

இன்றைய போராட்டத்தில் பேராயர் அதி.வண. நிஷாந்த பெர்னான்டோ (தலைவர், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம்), பேராயர் அதி. வண. துஷாந்த றொட்ரிகோ (இலங்கைத் திருஅவை, கொழும்பு மறைமாவட்டம்), பேராயர். அதி. வண. வே. பத்மதயாளன் (தென்னிந்திய திருச்சபை, யாழ். மறை மாவட்டம்), அருட்பணி. கிங்சிலி வீரசிங்க (தலைவர், இலங்கை மெதடிஸ்த திருஅவை), அருட்பணி. விலி ரணசிங்க (இலங்கை பெப்டிஸ்ட் திருஅவை), அருட்பணி. சமன் பெரேரா (தலைவர், இலங்கை பிரஸ்பிட்டேரியன் திருஅவை), இணை போதகர் லக்மால் விஜயரெட்ண (தலைவர் கிறிஸ்தவ சீர்திருத்த திருஅவை), அருள்அறிவர் கிறிஸ்சோ ஹெண்டி (தலைவர், இலங்கை மக்கள் தேவ அவை), அருள்அறிவர் ரொமேஷ் புலத்சிங்ஹல (தலைவர், நாற்சதுர சுவிசேஷ திருஅவை) மற்றும் இளம் ஆடவர் கிறிஸ்தவ அமைப்பு, இளம் பெண்கள் கிறிஸ்தவ அமைப்பு, கிறிஸ்தவ மாணவர் ஒன்றியம், இலங்கை வேதாகம சங்கம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், இலங்கை இறையியல் கல்லூரி, சத்திய வசனம், கொழும்பு இறையியல் கல்லூரி, கிறிஸ்துவுக்கான வாலிபர் அமைப்பு, இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தைச் சேர்ந்தோர் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
