சிறை செல்ல நான் தயார்! – கம்மன்பில அதிரடி அறிவிப்பு.
“ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் என்னைக் கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசு முயற்சிக்கின்றது. என்னைக் கைது செய்வதற்கு இந்த அரசு ஐந்து தடவைகள் முயற்சித்துத் தோல்வியடைந்தது. இந்தத் தடவையும் முயற்சிக்கின்றது. இந்தத் தடவை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்.”
இவ்வாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“அரச சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஊடாக எனக்கு எதிராக முறைப்பாடளித்து, சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகளை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்ட முறைமை குறித்து நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்களினால் பணிப்பாளர் நாயகத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசமைப்பின் 125 ஆவது பிரிவின் பிரகாரம் நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாடளித்தவரைக் காட்டிலும், முறைப்பாட்டைப் பதிவு செய்த உத்தியோகத்தருக்கே இந்த முறைப்பாடு குறித்து அதிக அக்கறை காணப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம், மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயம் உட்பட அரச நிறுவனங்களில் எமது ஆதரவாளர்கள் இருப்பதைப் போன்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலும் எமது ஆட்கள் உள்ளார்கள். நடப்பவற்றை எமக்குக் குறிப்பிடுவார்கள்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு மாதவ தென்னக்கோனுக்கு முழுமையான தகுதி காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலையீட்டினால்தான் தெரிவில் இரண்டாம் நிலையில் இருந்த ரங்க திஸாநாயக்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முறைகேடானது என்பதைச் சாட்சியங்களுடன் வெளிப்படுத்தினேன்.
வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு நான் இவற்றைக் குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட சத்தியபிரமாண கூற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றை குறிப்பிட்டேன். மோசடியாள முறையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாராயின், அதை விட பாரதூரமான மோசடி பிறிதொன்றும் கிடையாது.
தவறைத் திருத்திக் கொள்வதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக எம்மைப் பழிவாங்க முயற்சிக்கின்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் என்னைக் கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசு முயற்சிக்கின்றது. என்னைக் கைது செய்வதற்கு இந்த அரசு ஐந்து தடவைகள் முயற்சித்துத் தோல்வியடைந்தது. இந்தத் தடவையும் முயற்சிக்கின்றது. இந்தத் தடவை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்.
பொலிஸ் உயர் அதிகாரிகளிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெறும் யூடியுபர் ஒருவர் மாதம் இலட்சக்கணக்கில் உழைக்கின்றார். எனக்கு சேறு பூசும் பொறுப்பை அரசு இந்த நபரிடம் ஒப்படைத்துள்ளது. உழைக்கும் பணத்தை இவர் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன்.” – என்றார்.
