வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பண மோசடி: சந்தேகநபருக்கு நவம்பர் 3 வரை மறியல் நீடிப்பு!
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.
கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான கடவத்தை பொலிஸார், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக 22 முறைப்பாடுகள் இருக்கின்றன எனவும், இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்களிடமிருந்து அவர்களது கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர் எனவும் கடவத்தை பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்ட நீதிவான் அந்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
