கிளிநொச்சியில் எஸ்.ரி.எவ். மீது தாக்குதல்: ஐந்து பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் கைது!
கிளிநொச்சியில் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களும், ஐந்து பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்திச் சந்தேகநபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.
இதன்போது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரைக் கைது செய்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
