வித்தியா கொலை வழக்கு: மரணதண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது.

பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்விலேயே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவுப் பகுதியில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் இந்த மரணதண்டனைத் தீர்ப்பை அறிவித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.