யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் கைது! – பொலிஸார் தீவிர விசாரணை.
வத்தளைப் பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற காரைத் துரத்திச் சென்ற அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அவர் வேறொரு நபருக்குக் கொடுக்க ஆயுதத்தை எடுத்துச் சென்றார் எனத் தெரியவந்தது.
அதன்படி, இரண்டாவது சந்தேகநபரும் வத்தளை பொலிஸ் பிரிவின் மாபோல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 33 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர்கள் செய்யத் திட்டமிட்டிருந்த குற்றங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய வத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
