போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியர் மடக்கிப் பிடிப்பு!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியர், பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவுலப்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களான தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி தம்பதியர் தப்பியோட முயன்ற போதிலும் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திவுலப்பிட்டிய – மரதகஹமுல பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர்.
சந்தேகநபர்களான தம்பதியர் நீண்டகாலமாகத் திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அளுதேபொல, மரதகஹமுல, நெல்லிகஹமுல, நில்பனாகொட, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தம்பதியரிடமிருந்து 11 கிராம் 980 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5100 மில்லிகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களான தம்பதியர் மேலதிக விசாரணைகளின் பின்னர் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
