யாழ் பஸ் நிலைய கடைகளை அகற்றுவது தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட குழு ஆராய்வு! 

யாழ். மத்திய பஸ் நிலைய
தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட குழு ஆராய்வு! 

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகர சபையின் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவரும் மணிக்கடைகள், பழங்கள் விற்பனை, சிற்றூண்டிகள் விற்பனை உள்ளிட்ட தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் யாழ். மாநகர விசேட சபை அமர்வில் கலந்துரையாடப்பட்டது.

சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டனர். அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ மாநகர உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள் அறையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பஸ் நிலைய அபிவிருத்திக்காக குறித்த தற்காலிக கடைகளை அகற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், குறித்த அனுமதியற்ற கடைகளுக்கான  தற்காலிக மாற்றிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் விசேட குழுவின் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் உரிய தற்காலிக கடை நடத்துனர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தெளிவுபடுத்துவதுடன், மாற்றிடம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர ஆணையாளர், யாழ். மாநகர செயலாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர் என்று யாழ். மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.