இராணுவம் நிலைகொண்டுள்ள சகல துயிலும் இல்லங்களையும் மக்களிடம் கையளிக்க வேண்டும் – அரசிடம் தமிழரசு வலியுறுத்து.

“வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றைப் பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதாவது இடதுசாரிக் கொள்கையுடன் போராடிய ஒரு மாவீரர் ரோஹண விஜேவீரவின் நினைவுநாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாளிலேயே அவர் இலங்கை அரச படையினால் கொல்லப்பட்டார். அதில் ஜே.வி.பி. வீரர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவஞ்சலியில் எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

இதேவேளை, இந்த கார்த்திகை மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர்கள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32 இற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. எமது இனத்துக்காக – விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், பொதுமக்கள் இறந்த புனிதமான அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

இந்த அரசு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கே வாழும் தமிழ் மக்களிடம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அகற்ற வேண்டும்.

மக்கள் சுயாதீனமாக அங்கே நினைவுகூரலை நடத்துவதற்கு இடத்தைக் கொடுக்க வேண்டும். அந்த இடத்தை அங்கீகரித்து பொதுமக்களுக்கு அதனைக் கொடுக்கும் போது நீங்கள் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள். அதற்கான நிதியை ஒதுக்கி அந்தப் புனிதமான இடத்தைப் பாதுகாப்போம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுக்கொள்கின்றோம். இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.