வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாளக் குழுவுக்கு வலை!
“பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“பாதாள உலகக் குழுவினருக்கு எதிராகப் பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பாதாள உலகக் குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றது.” – என்றார்.
