நுகேகொடையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்.

சில எதிர்க்கட்சிகள் இணைந்து அநுர அரசுக்கு எதிராக ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் பேரணி நடைபெறுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், அரசின் ஜனநாயக விரோதச் செயல், அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும் இந்தப் பேரணி இடம்பெறுகின்றது என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சில எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசுக்கு எதிராகப் பேரணியை நடத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இதில் கலந்துகொள்ளவில்லை.

மலையகத்திலுள்ள பிரதான இரு கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை.

விமல் வீரசன்ச, சம்பிக்க ரணவக்க, திலீத் ஜயவீர ஆகியோர் தலைமைப் பதவி வகிக்கும் கட்சிகளும் அரசுக்கு எதிரான இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.