கால்வாய்க்குள் பாய்ந்த கார்! சிறுமி உட்பட மூவர் மரணம்!! – சாய்ந்தமருது பிரதேசத்தில் துயரம்.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று கால்வாயில் பாய்ந்தது. அந்தக் காரில் பயணித்த சிறுமி உள்ளிட்ட மூவரும் பலியாகியுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.

கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கால்வாய் அருகில் உள்ள பாதையில் பயணித்த வெசல்ரக சொகுசு கார் பாதையை விட்டு விலகி வெள்ளத்தில் பாய்ந்தது.

காரில் இருந்த 62, 59 வயதுடைய தம்பதியரும், அவர்களின் பேரப்பிள்ளையான 6 வயது சிறுமியும் குற்றுயிராக மீட்கப்பட்டனர்.

கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்புத் தொண்டர்கள் போராடினர்.

அப் போராட்ட மீட்புக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரையும் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், அவர்கள் மூவரும் மரணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனப் பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்துக்குக் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் போன்றோர்களும் விஜயம் செய்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.