கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு துயிலும் இல்லங்களில் அலையெனத் திரண்டு கல்லறை மேனியர்களை அஞ்சலித்த உறவுகள்..

தாயகக் கனவுடன் சமராடிச் சரித்திரம் படைத்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களை ஈழத் தமிழர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தி அஞ்சலித்தனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டு நின்று காவிய நாயகர்களுக்குக் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இம்முறை சுமார் 30 மாவீரர் துயிலும் இல்லங்களில் பிரதானமாக அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. தவிர, தனி மாவீரர் நினைவிடங்கள், உள்ளூராட்சி சபைகள், அரசியல் கட்சிகளின் பணிமனைகள் மற்றும் தனிநபர்களால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த வருடம் வழக்கத்திலும் பார்க்க அதிகளவான இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாலை 6.05 மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு தமிழ் உறவுகள் கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.

இது தவிர புலம்பெயர் தேசங்களிலும் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.

Leave A Reply

Your email address will not be published.