பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைக் கைவிடோம்! – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உறுதி.

“சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெள்ளம், மண்சரிவால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள், புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கபப்டும். அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:-

“எம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் இன்னும் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

காணாமல்போயுள்ளவர்களை உறவுகள் தேடுகின்றனர். நாம் கவலை அடைகின்றோம்.

இறந்தவர்களை எம்மால் மீள வழங்க முடியாது. ஆனால் அவர்களின் உறவுகளுக்கு சிறந்ததொரு நாட்டை கையளிக்க முடியும். அதற்குரிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

அனர்த்தங்கள் உயிர்களை, உடமைகளை பறித்தாலும் எமது மக்கள் மத்தியில் உள்ள மனிநேயத்தை பறிக்க முடியாது என்பது மீண்டும் உறுதியானது.

மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் எல்லா வழிகளிலும் உதவி வருகின்றனர். இலங்கையர்களாக இது பெருமையளிக்கின்றது.

மக்களுக்கான சிறப்பான சேவையை வழங்கிய முப்படையினர், பொலிஸார், அரசாங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகள்.

படையினர் உயிர் தியாகம்கூட செய்துள்ளனர். இவர்கள் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்காக உதவி செய்த வெளிநாடுகளுக்கு நன்றிகள்.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்காகவே அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசமைப்பை மீறி நாம் செயற்படவில்லை. மக்களின் உரிமையை மீறும் வகையில் நாம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தமாட்டோம்.

எம்மை விமர்சிப்பவர்களுக்கு எதிராக நாம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம். மக்களுக்காகவே அதனைப் பயன்படுத்துவோம்.

கம்பளையில் ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர் என எம்.பி. ஒருவர் கூறினார். நாடாளுமன்றச் சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டே இதனை அவர் சொன்னார்.

வெளியில் வைத்து இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருந்தால் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். எதிரணியில் இருந்தாலும் சிலர் பொறுப்புடன் செயற்பட்டனர்.

மேலும் சில எதிரணி அரசியல்வாதிகள் அனர்த்தத்திலும் அரசியல் செய்தனர்.

புதிய வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படமாட்டாது. நாட்டை மீட்பதற்குரிய எமது திட்டத்தின் ஓரங்கம்தான் வரவு – செலவுத் திட்டமாகும்.

எனவே, ஒதுக்கீடுகளை உரிய வகையில் பயன்படுத்தலாம். ஒதுக்கீட்டில் அனர்த்த நிலைமை மீட்புக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு உதவிகள் வழங்கப்படும்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

மீள்குடியேற்றத்துக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா (வீட்டு உரித்து கருத்தில் கொள்ளப்படமாட்டாது) வழங்கப்படும்.

முற்றாகச் சேதமடைந்துள்ள – மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கபப்டும். (வெள்ளம், மண்சரிவு இரண்டுக்கும் இது பொருந்தும்)

அபாய வலயங்களுக்கு மீண்டும் செல்வதற்கு இடமளிக்கமாட்டோம். அரச காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிட்டால் காணி வாங்குவதற்கு 50 இலட்சம் ரூபா வரை கொடுப்பனவு வழங்கப்படும்.

பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளைப் புனரமைப்பதற்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை வழங்கப்படும். (நான்கு கட்டங்களாக இதற்குரிய மதிப்பீடு இடம்பெறும்.)

வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்களுக்கு, ஒரு மாதத்துக்குரிய கொடுப்பனவாக, 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரையிலும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வரையிலும், மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.” – என்றார்.

மேற்படி திட்டங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படும்.

இதனை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்.

கொடுப்பனவு தொடர்பான நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.