அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு – கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் – மனோ எம்.பி. அறிவிப்பு.
“அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் என்ன செய்வது? மாற்று யோசனையாக, “வடக்கு – கிழக்கில் குடியேறி வாழ விருப்பமா?” என நான் சந்தித்த மலையுச்சியில் வாழும் மக்களைக் கேட்டேன். எனக்கே ஆச்சரியம், அவர்கள் உடனே உடன்பட்டுக் கோஷம் போட்டார்கள்!”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“மலையகத் தமிழ்த் தேசியத்துக்குத் தாயகம் மலையக பூமிதான்.
ஆனால், இதை நாம்தான் சொல்லி திரிகின்றோம். ஆனால், சிங்கள தேசம் அதை ஏற்கவில்லை.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, அவிசாவளை, குருநாகல் ஆகிய பிரதேச தோட்டங்களில் இருந்து, உழைச்சு, மண்ணுக்குள்ள போங்க. ஆனால், காணி எல்லாம் தர மாட்டோம்.
நுவரெலியா தவிர, ஏனைய கீழ் நாட்டு பெருந்தோட்ட காணிகளை, அயல் சிங்கள கிராமத்தவருக்குப் பிரிச்சுக் கொடுப்போம். ஆனால், உங்களுக்குத் தர மாட்டோம்!
இவைதானே உங்கள் (சிங்கள தேசம்) நிலைப்பாடு?
இதுதான் மலையகக் காணி உரிமை பிரச்சினை..!
இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், தற்குறிகள் அல்லது வறட்டுவாதிகள் ஆவர்.
மாண்புமிகு மலையகத் தமிழர், மலையக மண்ணில் வாழணும்தான். அதையே நானும் விரும்புகின்றேன்.
ஆனால், அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் என்ன செய்வது?
ஆகவேதான், மாற்று யோசனையாக, “வடக்கு – கிழக்கில் குடியேறி வாழ விருப்பமா?” என நான் சந்தித்த மலையுச்சியில் வாழும் மக்களைக் கேட்டேன். எனக்கே ஆச்சரியம், அவர்கள் உடனே உடன்பட்டுக் கோஷம் போட்டார்கள்!
புலம்பெயர்வால், வடக்கு – கிழக்கில் இன்று காலியாகி, காடாகி வரும் காணிகளை, உரிமையாளர், மனமுவந்து தந்தால் இது சாத்தியப்படலாம். அவ்வளவுதான்!
என்னில் குற்றம் காண்பவர்கள், தோழரின் பக்கத்தில், இருக்கும் மாண்புமிகு மலையக நண்பர்கள், தங்கள் தோழரிடம் சொல்லி, பாதுகாப்பான காணிகளை மலையக மக்களுக்கு வாங்கித் தாருங்கள்!
“இடம், கொஹேத தியன்னே, மனோ?” (காணி, எங்கே இருக்கின்றது, மனோ?) என தோழர், என்னிடமே திருப்பிக் கேட்டார். ஆகவே, அவருக்கு இந்தக் காணி விடயத்தில் புரிதல் இல்லை.
ஆகவே, உண்மையான என்.பி.பி. நண்பர்கள் (தற்குறிகள் இல்லை!) அவருக்கு விளக்கிக் கூறனும்.
வடக்கு – கிழக்கில், மலையகத் தமிழர் குடியேறுவதை, சிங்கள தேசம், அரசியல் நோக்கில் விரும்பாட்டி, நமக்குப் பாதுகாப்பான காணியை இங்கே தரட்டுமே! நானும், அதைத்தானே கேட்கின்றேன்.
நீங்கள் காணியும் தர மாட்டீங்க! போகவும் விட மாட்டிங்க! இன்னொரு 200 வருடங்கள், இப்படி மண்சரிவு மலைகளில் இருந்து, உழைத்து, ஓடாகி, மண்ணுக்கு உள்ளே மடியனும் என்பதா, உங்கள் வறட்டுவாத தீர்வு? தற்குறி தீர்வு?” – என்றுள்ளது.
