அநுர தலைமையில் இலங்கை மீண்டெழும் – அமெரிக்கா முழு நம்பிக்கை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அலிசன் ஹூக்கர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட அலிசன் ஹூக்கர், அனர்த்தத்தால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை நாட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசும் அளித்த ஆதரவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி பொருளாதாரக் குறிகாட்டிகளை உயர்த்தி வரும் நிலையிலே இலங்கை இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் நீண்டகால அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும், விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வருமான வழிகளையும் மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும், இது தொடர்பாக அனைத்து நட்பு நாடுகளின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தீர்வை வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது என்றும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆதரவளிப்பதாகவும் அலிசன் ஹூக்க இதன்போது குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான இலங்கை அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும், தொடர்ந்தும் இதுபோன்ற வருகைகளை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போதைய அனர்த்த நிலைமையிலிருந்து மீண்டு இலங்கை மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைய அமெரிக்க அரசு வழங்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.