ரணில் எமக்கு வேண்டும்! அவர் பதவி விலகக்கூடாது!! – சஜித் அணி நேசக்கரம்.

“முன்னாள் ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். அவர் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை. அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர். அவர் பதவி விலகுவதை நாம் விரும்பவில்லை.

ரணில், சஜித் என இரு தரப்பு உறுப்பினர்களும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எதிர்காலத்தில் அமையவுள்ள எமது நாட்டை வழிநடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவம் அவசியம். அவர் ஆலோசகராகவேனும் பதவி வகிக்கலாம்.” – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்குத் தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்குத் தான் தடை எனக் கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்கத் தயார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.