திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் தையிட்டியில் பொலிஸார் அராஜகம்! – மதத் தலைவர், அரசியல்வாதிகள் கைது.

யாழ். தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி, மதத் தலைவர் மற்றும் அரசியல்வாதிகளைக் கைது செய்தனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலை விகாரை முன்பாகப் போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றிருந்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராகப் பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளத் தடையுத்தரவைப் பெற்றும் இருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் இன்று காலை ஆரம்பமான வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் அவர்கள் முரண்பட்டு அந்தப் பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

“இந்தப் போராட்டம் ஓர் அமைதி வழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்குச் சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருப்பீர்கள்?” – என்று குரல் எழுப்பி பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

போராட்டக் களத்தில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும் வரை அகன்று செல்லமாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.