உள்ளூராட்சி பாதீடு தோல்வியால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு.
சில உள்ளூராட்சி சபைகளில் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், தோற்கடிக்கப்படுவது திசைகாட்டியின் வரவு – செலவுத் திட்டம் அல்ல என்றும், அது மக்களின் வரவு – செலவுத் திட்டம் என்றும், தோற்கடிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான ஏராளமான திட்ட முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபையில் இருந்து மக்களுக்குச் சேவைகளை உகந்த முறையில் வழங்க இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும், திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏதேனும் ஒரு உள்ளூராட்சி சபையில் இரண்டு தடவைகள் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்றாவது வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், குறித்த உள்ளூராட்சி சபையின் தலைவர் இயல்பாகப் பதவியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
