தையிட்டி விகாரை காணியை மக்களிடம் மீள வழங்குங்கள்! – அரசிடம் நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை.
“தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதனை நான் அரசுக்கும் கூறியுள்ளேன்.”
இவ்வாறு யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி, பொதுமக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்புக்களுக்கு நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.
இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம் எனத் தமிழ் , சிங்கள மக்களிடம் கோருகின்றேன்.
காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.” – என்றார்.
