சிறையில் டக்ளஸுக்கு அச்சுறுத்தல் இல்லை! சுரேன் ராகவனின் கருத்துக்கு நீதி அமைச்சர் இப்படி பதில்..
மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இதுவரை எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன் நேற்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் இன்று ஊடகங்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை.
எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாகச் சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
