வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு! சிகிச்சை பெற்று வந்த கைதி காயம்!!
களுத்துறை, நாகொடை வைத்தியசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத ஒருவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கைதி, களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான “ரஜவத்தே சத்துவா” என அழைக்கப்படும் திலிப் சத்துரங்க என்ற இவர் இம்மாதம் 13 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி கைதி கடந்த 29 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏனைய கைதிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பலத்த காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு முகம்கொடுத்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
