அடுத்தடுத்து குலுங்கிய வடகிழக்கு மாநிலங்கள்: திரிபுரா மற்றும் அசாமில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

ஷில்லாங்,

திரிபுரா மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று காலை 4.17 மணியளவில் ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. சுமார் ஒரு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.