சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் சாவு! – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது.

வென்னப்புவ, வைக்கால – தம்பறவில பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 5 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானம் எனக் கருதப்படும் திரவமொன்றே இந்த மரணங்களுக்குக் காரணம் எனத் தற்போது சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வென்னப்புவ, வாய்க்கால், தம்பரவில பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் ஐவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுபானம் எனக் கருதப்படும் திரவத்தை உட்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் அடிக்கடி அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

அவர்களில் இருவர் இன்று காலை தொழிற்சாலையில் உள்ள அறை ஒன்றில் உயிரிழந்த கிடந்த நிலையில், மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தொழிற்சாலைக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் இருந்த ஒருவரும் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அதே பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் மேலும் மூன்று பேருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டன என்றும், அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

வென்னப்புவ பொலிஸார் இந்த உயிரிழப்புக்கள் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, தற்போது சட்டவிரோத மதுபானம் அருந்தியதே இந்த உயிரிழப்புக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.