டக்ளஸ் பிணையில் விடுவிப்பு! – வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட வேளை 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது.

பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.

எனவே, அந்தத் துப்பாக்கி எவ்வாறு பாதாளக் குழு வசம் சென்றது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

டக்ளஸ் தேவானந்த தரப்பில் உரிய பதில் வழங்கப்படாததால் அவர் கைது செய்யப்பட்டார். இரு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே இன்று அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அவருக்குப் பிணை வழங்கிய இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.