உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை: 52 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை நடைபெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ். மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்கள் மனதில் நீங்காத வடுவாக இந்தப் படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.