யாழில் பத்தரை இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்களுக்குப் போதை மாத்திரை விற்பனையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டு வருகின்றார் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த இளைஞரின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அவரிடம் இருந்து போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
