கல்வி மறுசீரமைப்பைக் கைவிடு!! ஹரிணியே உடனே பதவி விலகு!! – போராட்டத்தில் குதித்த விமல் அணி.
இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பெயர் போன தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் தனது கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கல்வி அமைச்சரின் திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை எனவும், அவை நாட்டின் தேசிய கல்வி முறைமையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
“ஹரிணியின் தவறான கல்விச் சீர்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறு”, “பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பகடைக்காயாக்கும் கல்வி அமைச்சரே பதவியை விட்டு விலகு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தரையில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
குறிப்பாக, அமைச்சரை விமர்சிக்கும் வகையிலான கேலிச்சித்திரங்கள் மற்றும் “Harini Go Home” போன்ற வாசகங்கள் அடங்கிய பாரிய பதாகைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வித் துறையில் அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், இந்தச் சீர்திருத்தங்கள் உடனடியாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்னாலுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், அந்தப் பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
