லொறி மோதி இளைஞர் பலி!
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் 6ஆவது மைல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தவல, அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து, லொறியின் சாரதி வாகனத்தைச் சம்பவ இடத்திலேயே கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
