இந்தியக் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க நாமல் எம்.பி. தலைமையில் ‘மொட்டு’ ஒடிசா பயணம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒடிசாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றது.
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியக் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம், இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரள மற்றும் மிலிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரே இந்தியா செல்லவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்துக்கும் இந்தக் குழு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்துக்கு முன்னதாக, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
