வடக்கு மாகாண வளர்ச்சிக்கு அழைப்பு முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் ‘யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’ தொடக்க விழாவில் ஆளுநர் தெரிவிப்பு.

“வடக்கு மாகாண இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்க முன்வருமாறு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான ‘யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’, 16 ஆவது ஆண்டாக இம்முறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

“வர்த்தகக் கண்காட்சிகள் என்பவை வெறும் பொருட்காட்சிகள் மட்டுமல்ல. அவை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகும். புதிய கூட்டுப் பங்காண்மைகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் இவை முதலீடுகளைத் தூண்டுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு அங்கீகாரத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்கி வலுவூட்டுகின்றன.

விவசாயம், கடற்றொழில், கைவினைப்பொருட்கள் அல்லது தொழில்நுட்பம் என யாழ்ப்பாணத்தின் தனித்துவமான தயாரிப்புகள் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்து, பிராந்திய அபிவிருத்தியை இக்கண்காட்சி பலப்படுத்துகின்றது.

எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்தில், எமது கைத்தொழில்கள் உலக சந்தையில் போட்டியிடக்கூடிய வகையில் அமைவதற்கு, ‘டிஜிட்டல் மாற்றத்தை’ நாம் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதேவேளை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிலையான நடைமுறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்தின் அடுத்த கட்ட சுபீட்சத்தை வடிவமைக்கவுள்ள எமது இளைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். முன்மொழியப்பட்டுள்ள ‘வடக்கு வணிக சம்மேளனங்களின் இணையம்’ எதிர்காலத்தில் எமது பொருளாதார அபிவிருத்தியில் மிக முக்கிய பங்காற்றும் என நான் நம்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தில் இப்போது முதலீட்டுக்குச் சாதகமான சூழல் காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம், வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. வடக்கின் பல வளங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாமல் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எமது மாகாண இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்க முன்வருமாறு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

யாழ்ப்பாணம் வணிக மற்றும் கைத்தொழில் மன்றம் மற்றும் லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் யாழ். முற்றவெளி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நாடா வெட்டி கண்காட்சிக் கூடங்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆளுநர் மற்றும் விருந்தினர்கள் வர்த்தகக் கூடங்களைப் பார்வையிட்டனர். 400 இற்கு மேற்பட்ட வர்த்தகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் ஏ.எப்.எம். பாரூக், யாழ். வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கே.விக்னேஷ், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் இமால்கா முல்லேகம, வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.