அதிகார வெறியில் ஆட்சியாளர்கள் நாட்டின் அடையாளங்களே ஆபத்தில் – அமைச்சர் லால் காந்தவின் உரையை சுட்டிக்காட்டி நாமல் எம்.பி. குற்றச்சாட்டு.

தமது அரசைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாசாரம், மதம், சட்டங்களுக்கு முரணாக வகையில் செயற்பட தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக உள்ளமை அமைச்சர் லால் காந்தவின் உரையின் மூலம் தெளிவாகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கோர்ட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என அமைச்சர் லால் காந்த கூறியமை சட்டத்தைத் தாக்குவதாகும். காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் பொருள் அரசில் உள்ளவர்கள் தங்கள் உயிர் வாழ்வுக்காக உள்ளூர் கலாச்சாரத்தையும் மதங்களையும் அழிக்கத் தயாராக இருக்கின்றனர் என்பதுதான்.

ஜனாதிபதியின் மனம் சிறிதளவு காயப்பட்டாலும், பொலிஸ்மா அதிபரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஏனைய அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு ஜனாதிபதியின் மனதை ஆற்றுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.

மக்கள் ‘அன்தரே’யின் கதைகளைக் கேட்டு சிரித்துக் கைதட்டியதைப் போல இன்று பொய்களை நம்பி ஏமாந்துள்ளனர். இறுதியில் அன்தரே ராஜாவானதைப் போல, இன்று ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து தனது குரோதத்தையும் பொறாமையையும் வெளிப்படுத்துகின்றார்.

இந்த அரசிடம் நிலையான ஒரு கொள்கை இல்லை. 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 159 விதமான கொள்கைகளையே கொண்டுள்ளனர்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் யு. எஸ்.எய்ட் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்களை ஒரு குழு முன்னெடுக்கும் அதேவேளை, கட்சியின் ஆரம்பகாலக் கொள்கைகளை நம்பியிருந்த அடிமட்டத் தொண்டர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.