புதிய அரசமைப்பை உருவாக்க அரசு எதுவும் செய்யவில்லை! – அஜித் பி பெரேரா எம்.பி. விசனம்.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி ஆட்சிக்கு வந்தவுடன் புதிய யாப்பினை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றியோ அல்லது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியோ நாடாளுமன்றத்திலோ அல்லது பொது இடங்களிலோ ஏதம் குறிப்பிடவில்லை.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியின் மோகத்துக்கு ஜனாதிபதியும் அடிபணிந்து விட்டார் என்றே தோன்றுகின்றது. கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நாட்டுக்குச் சாபம், வெஷ்மினிஸ்டர் முறைமையிலான நாடாளுமன்ற ஆட்சி முறைமை சிறந்தது என்று நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். ஆனால் தற்போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கத்தில் அவர் மௌனம் காக்கின்றார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டும். புதிய யாப்பு உருவாக்கம் தொடர்பில் எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார், எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் மூன்று மாதங்களுக்கு பின்னரும் அதே கேள்வியை கேட்டேன் அதற்கும் ‘எண்ணக்கரு பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்’ என்றே பதிலளித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிப்பு என்பது வெறும் அறிவிப்பாகவே காணப்படுகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்குரிய ஆரம்பக்கட்ட எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் எடுக்கவில்லை.

நாட்டில் நடைமுறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணபதற்காக ஒட்டுமொத்த மக்களின் அபிலாஷைகளையும் கோரி புதிய யாப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓரிரு மாதங்களில் அரசமைப்பை உருவாக்க முடியாது.

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நடைமுறையில் உள்ள அரசமைப்பில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே புதிய யாப்பை உருவாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும். பத்தரமுல்ல கட்சி காரியாலயத்தில் இருந்துகொண்டு யாப்பு உருவாக்கப் பணிகளை முன்னெடுக்க முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.