“இலங்கையில் நிபா வைரஸ் அபாயம் குறைவு” – சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
இலங்கையில் நிபா வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நீபா வைரஸ் தொடர்பாக நிலவும் அச்சம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள செயலாளர், பொதுமக்கள் தேவையற்ற பீதி அடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அண்மைக் காலத்தில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு சில நிபா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை.
நிபா வைரஸ் பிரதானமாக விலங்குகளுக்கு இடையிலேயே, குறிப்பாக வெளவால்கள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது பொருட்களுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது மட்டுமே மிகவும் அரிதாக மனிதர்களுக்கு இது பரவக்கூடும்.
மனிதர்களுக்கிடையில் இந்தத் தொற்று பரவுவது மிக நெருக்கமான மற்றும் நீண்ட காலத் தொடர்புகள் மூலம் மட்டுமே நிகழ்கின்றது. இது இன்புளுவென்சா போன்று காற்றின் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் அல்ல.
இலங்கையில் இந்நோயைக் கண்டறிவதற்கும் எதிர்கொள்வதற்கும் போதிய வசதிகள் உள்ளன.” – என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“நோயாளிகளை விரைவாகக் கண்டறிய இலங்கையில் வலுவான நோய் கண்காணிப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்நோயைக் கண்டறிவதற்குத் தேவையான நவீன ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பிராந்திய ரீதியிலான நோய் நிலைமைகளைச் சுகாதார அமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை என்றும், சரியான தகவல்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
