நீதிமன்றுக்கு இழுத்து அரசியல் பழிவாங்கல்! – அநுர அரசு மீது நாமல் பாய்ச்சல்.
“தற்போதைய அரசு தனது தோல்விகளையும், ஊழல்களையும் மூடிமறைப்பதற்காகவே எம்மை நீதிமன்றத்துக்கு இழுக்கின்றது. இதனால் அரசுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு நாடு திரும்பிய அவர், இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு மேற்கொண்டுள்ள நிலக்கரி ஊழல் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் மாயமான சம்பவங்களை மறைப்பதற்காக எம்மை நீதிமன்றத்துக்கு அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பைத் திசைதிருப்பவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.” – என்றார்.
தமக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை குறித்துப் பேசிய நாமல் எம்.பி.,
“பெலவத்தையிலிருந்து நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபருக்கு நாட்டின் பொலிஸ் துறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது கூடத் தெரியவில்லை. தங்காலைக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரம் கூட அவருக்குத் தெரியவில்லைப் போலும். காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு கூறி, 9.50 மணிக்கு அழைப்பாணையைத் தருவது நகைப்புக்குரியது.
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் மட்டும் அல்ல, காசோலைகள் வங்கிகளில் மறுக்கப்படுகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் செல்லுபடியாகவில்லை. முன்னைய காலத்தில் நாடு திவாலானதாகக் கூறப்பட்டபோது கூட காசோலைகள் மறுக்கப்பட்டதில்லை. ஆனால் இப்போதுதான் நாடு உண்மையாகவே திவாலாகியுள்ளது.” – என்றார்.
இந்தியாவின் கலிங்கா பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பின் பேரிலேயே தாம் அங்கு சென்றனர் என்றும், இதனைப் பார்த்து இங்குள்ளவர்கள் தேவையற்றுப் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
