வடக்கிலிருந்து படைகளை அகற்ற தமிழ் மக்கள் விரும்பவில்லையாம் – இப்படி முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகின்றார்.
“வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்குத் தமிழர்களுக்கு விருப்பமில்லை. அவை இருப்பதே தமக்குப் பாதுகாப்பு என அவர்கள் கருதுகின்றனர்.”
இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் அண்மைக்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போதே, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் இராணுவ முகாம்களைத் தமது பாதுகாப்பாகக் கருதுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தைப்பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுர, தமிழ் மக்களின் மனங்களில் பிரிவினையை விதைத்துள்ளார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் எனக் காண்பிக்க முனைந்துள்ளார்.
தமிழர்களின் வாக்குகள் ஏனைய ஜனாதிபதிகளைவிட, ஜனாதிபதி அநுரவுக்கே அதிகமாகக் கிடைத்தன. எனவே, சிங்கள மக்களைக் காட்டிக் கொடுத்தாவது வடக்கைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுர எண்ணுகின்றார்.
வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, தெற்கிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் முகாம்களை அகற்றக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் முகாம்களின் எண்ணிக்கையை நாமும் குறைத்தோம். ஆனால், முற்றாக நீக்காமல் தேவையானவற்றைத் தக்கவைத்தோம். ஏனெனில், இராணுவ முகாம்கள் அவசியமானவை.
சில தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தினாலும் வடக்கிலிருந்து படைகளை முழுமையாக வெளியேற்ற அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையானளவு படைகள் இருக்க வேண்டும். தேவையானவைதான் வடக்கில் உள்ளன. அவற்றை அகற்றக் கூடாது.” – என்றார்.
