நீரில் மூழ்கி இருவர் மரணம்!

இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில், ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாலபே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் குழுவொன்றுடன், அவிசாவளை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தார் என்றும், ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிகிரியா – திகம்பதஹ பகுதியில் உள்ள மஹா வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஆண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கேகாலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நண்பர்கள் குழுவுடன் மஹா வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.