யாழில் அதிகாலை பரபரப்பு 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஹயஸ் ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில்
பொலிஸின் விளக்கம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததால், அதனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன், வாகனத்தில் இருந்த வட்டுக்கோட்டை, நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் பின்னணி மற்றும் அதிகாலை பயணத்துக்கான நோக்கம் குறித்துத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குடும்பத்தினரின்
உருக்கமான
வாக்குமூலம்

இதேவேளை, தனது பெறாமகன் குடும்பக் கஷ்டம் காரணமாகவே சிறு வயதில் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகச் செய்து வந்தார் என்று உயிரிழந்த சிறுவனின் சித்தி கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அறுவடை வேலைக்காக வேலையாட்களை ஏற்றவே அவர் அதிகாலை வேளையில் வேலணை நோக்கிச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டாலும், பொலிஸாருக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் வாகனம் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சம்பவத்தின் போது பொலிஸாருக்கு வழங்கத் தன்னிடம் பணம் இல்லாததாலேயே, அச்சத்தில் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கக்கூடும். அதற்காக இவ்வளவு கொடூரமாகச் சுட்டுக் கொன்றிருக்கத் தேவையில்லை.” – என்று அவர் கதறியழுதார்.

17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.