சி.ஐ.டியின் 4ஆம் மாடி சித்திரவதை முகாம்! – புதிய சட்டவரைவு குறித்து முன்னாள் அமைச்சர் சாடல்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியானது ஒரு சித்திரவதை முகாமாகவே காணப்படுகின்றது என்றும், மனித குலத்துக்கு எதிரான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

“1979 ஆம் ஆண்டில் அப்போதைய சூழலுக்குத் தேவையான ஒரு தற்காலிக ஏற்பாடாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாகப் பல்வேறு சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்படும் சந்தேகநபர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுகின்றார்கள். அங்கு அவர்களுக்கு அமர்வதற்கு ஒரு நாற்காலி கூட வழங்கப்படுவதில்லை. இன்றும் அத்தகைய மனிதாபிமானமற்ற சூழலே அங்கு நிலவுகின்றது. அந்த இடம் ஒரு சித்திரவதை முகாமாகவே மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசைப் பாதுகாக்கும் நோக்கில், மனித குலத்துக்கு எதிரான புதிய சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்துவிட்டு, மனிதநேயமிக்க ஒரு புதிய சட்டத்தை உருவாக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.