கிளிநொச்சியில் நள்ளிரவு பரபரப்பு மணல் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! – சாரதி தப்பியோட்டம்.

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

புளியம்பொக்கணைப் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மகேந்திரா கப் ரக வாகனம் ஒன்றையே பொலிஸார் தேராவில் பகுதியில் மறித்தனர். இதன்போது, பொலிஸாரின் சமிக்கையை மீறி அந்த வாகனம் நிறுத்தாமல் அதிவேகமாகச் செல்ல முற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தை நோக்கிப் பொலிஸார் ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் வாகனத்தின் சக்கரம் சேதமடைந்து வாகனம் செயலிழந்த நிலையில், அதன் சாரதி வாகனத்தை விட்டு இறங்கித் தப்பியோடினார்.

இந்தச் சம்பவத்தின் போது எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய சாரதியைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.